Published Date: February 27, 2025
CATEGORY: CONSTITUENCY
சென்னையில் 3 ஆயிரம் வேலை வாய்ப்புகளுடன் எல்காட் நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் ஐடி டவர் விரைவில் திறக்கப்படும் என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்னணு நிறுவனம்(எல்கார்ட்), தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது தொடர்பாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத்தின் முதலீட்டு இலக்காக நிலை நிறுத்தும் வகையில் ஹெலிகாப்டர் அமைப்பின் ஒரு பகுதியாக 'எல்கோசெஸ்' ஐடி டவர் எனப்படும் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை(2), திருநெல்வேலி, சேலம், ஓசூர், ஆகிய எட்டு முக்கிய இடங்களில் எல்காட் நிறுவனத்தில் மூலம் 'எல்கோசெஸ்' ஐடி டவர்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
இதுவரை 1.13 லட்சம் வேலை வாய்ப்பு:
அந்த வகையில் இதுவரை 'எல்கோசெஸ்' ஐடி டவர்களில் 90 நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்பட்டு அந்த நிறுவனங்கள் மூலம் 1.13 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவை ஐடி டவரில் 3,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் அடுத்த கட்டமாக கோவையில் அதிகரித்து வரும் தகவல் தொழில்நுட்ப இடைத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எல்கோசெஸ், கோவை ஐடி டவர் 17.17 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது .
அதேபோல் சென்னை சோழிங்கநல்லூரில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு, 2.33 லட்சம் சதுர அடி பரப்பளவில் சோழிங்கநல்லூர் ஐடி டவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதன் திறப்பு விழா விரைவில் நடைபெறும். மேலும் தொடக்க நிலையில் உள்ள கோவை தமிழ்நாடு டெக் சிட்டி மற்றும் ஓசூர் ஒருங்கிணைந்த டெக் சிட்டி திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Media: Hindu Tamil